Last Updated on: 15th June 2023, 09:13 am
ஹைதராபாத்: லண்டனுக்கு படிக்கச் சென்ற ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண், பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞரால், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மற்றொரு பெண்ணும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹைதராபாத் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வினி (27). இவர் பட்ட மேற்படிப்பு (எம்.எஸ்) படிக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் சென்றார். அங்கு தேஜஸ்வினி தனது தோழி அகிலா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். ஒரு வாரத்துக்கு முன்பாக, பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர், அவரது தோழியுடன் இந்த வீட்டில் வந்து தங்கியுள்ளார்.
தேஜஸ்வினி தனது பட்ட மேற்படிப்பை கடந்த 2 மாதங்களுக்கு முன் முடித்திருந்தார். தற்சமயம் அவர் லண்டனில் வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி காலை 10 மணியளவில், சமையல் அறையில் தேஜஸ்வினியும், அகிலாவும் சமைத்துக் கொண்டிருந்தனர்.
போதைக்கு அடிமை: போதைக்கு அடிமையான பிரேசில் இளைஞர் தேஜஸ்வினியிடம் பணம் பறிக்க முயன்றுள்ளார். இதற்கு தேஜஸ்வினி மறுத்தபோது, பிரேசில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதை தடுக்க வந்த அகிலாவுக்கு கத்தி குத்து காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வடக்கு லண்டன் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்ததில், தேஜஸ்வினி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அகிலா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.குடும்பத்தினர் அதிர்ச்சி: அதன் பின்னர் போலீஸார் விசாரணை நடத்தி பிரேசில் குற்றவாளியையும், அவரது தோழியையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேஜஸ்வினி கொலை சம்பவத்தால், ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தார் மிகவும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இன்னமும் ஓரிரு நாட்களில் தேஜஸ்வினியின் உடல் ஹைதராபாத் வரும் என அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.