Last Updated on: 10th June 2023, 10:11 am
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஏற்கெனவே அவர் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்த நிலையில், எம்.பி பதவி ராஜினாமாவும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜான்சன் பிரதமராக இருந்தார். அப்போது கொரோனா தொற்று உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிக்கொண்டிருந்தது.
தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இங்கிலாந்து இருந்தது. எனவே தொற்று பாதிப்பை கட்டப்படுத்த லாக்டவுனை ஜான்சன் அறிவித்திருந்தார். மக்கள் வீட்டை விட்டு வெளியவே வரக்கூடாது என்று சொல்லப்பட்டது.
இப்படியான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில், போரிஸ் ஜான்சனின் வீட்டில் பர்த்டே பார்ட்டி ஒன்று அரங்கேறியது. இதில் ஜான்சன், ரிஷி சுனக் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய தலைகள் பங்கேற்றன. இந்த விவகாரம் ‘பார்ட்டிகேட்’ என்று குறிப்பிடப்படுகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துக்கொண்டிருந்த சூழலில் நாட்டின் பிரதமர் ஹாயாக பார்ட்டியில் பங்கேற்றிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் ஜான்சன் மீது சரமாரியாக குற்றம் சாட்டின.
இதனையடுத்து அவர் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பும் கோரினார். ஆனால், இது குறித்த விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. விசாரணையில் ஜான்சன் விதிளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது அவர் ராஜினாமா செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், “எனக்கு எதிராக சாட்சியங்கள் ஒன்றுதிரட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் என்னை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவதை சிலர் கச்சிதமாக செய்து முடித்துள்ளனர்.
எனவே நான் ராஜினாமா செய்கிறேன். இருப்பினும் இது தற்காலிகமானதுதான். நான் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினேன் என்பதற்கு எந்தவித ஆதராத்தையும் சிறப்பு குழு தற்போதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் என்னை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் உறுதியாக இருப்பது எனக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே இங்கிலாந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில் நிர்வாக தோல்விக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.