லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது இதயத்தையே பார்த்த வினோதமான ஒரு சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.
இந்த உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவத் துறையில் நாம் மின்னல் வேகத்தில் முன்னேறி வருகிறோம். அங்கே கண்டறியப்படும் தொழில்நுட்பங்கள் விலைமதிப்பற்ற எண்ணற்ற உயிர்களைக் காக்க உதவியுள்ளது.
இதன் காரணமாகவே மனிதர்களின் சராசரி ஆயுள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம் யோசித்துக் கூட பார்க்க முடியாத சிகிச்சையும் ஆப்ரேஷனும் இப்போது சாதாரணமாகவே நடக்கிறது. இதற்கு மருத்துவத் துறையில் நாம் அடைந்த வளர்ச்சியே காரணம்.
லண்டன்: இதற்கிடையே மிகவும் வினோதமான ஒரு சம்பவம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்துள்ளது. அங்கே பெண் ஒருவர், மியூசியத்தில் தனது சொந்த இதயத்தை வந்து பார்த்துள்ளார். இதயமே வெளியே இருந்தால் எப்படி அந்த பெண் உயிருடன் இருக்க முடியும் என்கிறீர்களா… 16 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பெண்ணுக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண்ணை காக்க உயிர் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது, அந்த பெண்ணின் உடலில் இருந்து அகற்றப்பட்ட தனது சொந்த இதயத்தைப் பார்ப்பதற்காகச் சமீபத்தில் அந்த பெண் அருங்காட்சியகத்திற்குச் சென்றுள்ளார். ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட் பகுதியைச் சேர்ந்த ஜெனிஃபர் சுட்டன், லண்டனில் உள்ள ஹன்டேரியன் அருங்காட்சியகத்திற்குச் சென்று தனது இதயத்தைப் பார்த்துள்ளார்.
பெரும் அதிசயம்: பல ஆண்டுகளாக தனக்குள் இருந்த இதயத்தைப் பார்ப்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் அதை ஒரு பெரும் அதிசயம் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த பெண் மேலும் கூறுகையில், “நான் முதலில் உள்ளே நுழைந்த போது, பல ஆண்டுகளாக அது எனக்கு இருந்த ஒன்று தானே என்றே யோசித்தேன்.. சற்று வினோதமாகவே முதலில் இருந்தது.
ஆனால் அதுவும் கூட மிகவும் நன்றாக இருந்தது.. அது என் நண்பனைப் போன்றது. அது என்னை 22 வருடங்கள் உயிரோடு வைத்திருந்தது.. நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். நான் என் வாழ்நாளில் டப்பாவுக்குள் நிறைய விஷயங்களைப் பார்த்திருக்கிறேன்.. ஆனால் எனது இதயத்தையே அப்படிப் பார்ப்பது மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் உடல் உறுப்பு தானத்தை ஆதரிக்கிறேன்.. இது தான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கிப்ட்.. சுறுசுறுப்பான மற்றும் பிஸியான வாழ்க்கையை நடத்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நமக்குப் பெரியளவில் உதவும்” என்றார்.
உடல்நிலை பாதிப்பு: பிரிட்டனைச் சேர்ந்த சுட்டன் முதன்முதலில் மலைகளில் நடக்கும் போதும் உடற்பயிற்சி செய்யும் போதும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு 22 வயதே ஆகி இருந்தது. பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அந்த பெண்ணுக்கு நடந்த மருத்துவ சோதனையில், கார்டியோமயோபதி இருப்பது கண்டறியப்பட்டது.
அதாவது அது உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் திறனைக் கடுமையாகப் பாதிக்கிறது. அப்போது இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அந்த பெண் இறந்துவிடுவார் என்ற சூழலே இருந்தது. கடந்த 2007ஆம் ஆண்டு அந்த பெண்ணுக்கு மிகவும் பொருத்தமான இதயம் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது அந்த பெண், “மாற்று அறுவை சிகிச்சை சமயத்தில் நான் வித்தியாசமாக உணர்ந்தேன்.. நான் புதிதாக உணர்ந்தேன்” என்று அவர் அவர் தெரிவித்தார். சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து சுட்டன் தனது இதயத்தைக் காட்சிக்காகப் பயன்படுத்த அனுமதித்தார்..
இதையடுத்து இதயம் ஹோல்போர்னில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவே அவர் அருங்காட்சியகத்தில் தனது இதயத்தை வைக்கச் சம்மதித்தார்.