Last Updated on: 27th July 2024, 06:22 pm
ஜப்பானில் மக்கள்தொகை குறைந்து வருவதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கிறது.ஜப்பானின் மக்கள்தொகை கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, 2022ஆம் ஆண்டில் 125 மில்லியன் மக்கள்தொகையில் இருந்து, 2023ஆம் ஆண்டில் 124.9 மில்லியனாகக் குறைந்துள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டிற்கு பிறகு ஜப்பான் நாட்டின் மக்கள்தொகை வெகுவாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.
மக்கள்தொகை குறைவதன் காரணத்தைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளம் தலைமுறையினருக்கு திருமண வாழ்க்கையில் நாட்டம் இல்லாததே முக்கிய காரணமாகக் கூறப்பட்டு வருகிறது.
சராசரி மனிதனின் வாழ்க்கையில் சம்பாதிக்கும் பணத்தில் 60% திருமண வாழ்க்கைக்காகவே செலவழிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.அதுமட்டுமின்றி, ஜப்பான் ஆணாதிக்கம் செலுத்தும் சமூகமாக இருந்து வருவதாகவும், அதனால் பெண்கள் திருமண வாழ்க்கையை புறக்கணிப்பதாகவும் கூறுகின்றனர்.மேலும், பெண்கள் வேலைக்குச் சென்று, சுயமாக முன்னேறி வருவதால், அவர்களுக்கு திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
இருப்பினும், ஜப்பானில் அந்நிய நாட்டினரின் மக்கள்தொகை அதிகரித்து வருவதாகவும் தெரிய வருகிறது.அந்நிய நாட்டினர் மக்கள்தொகை 11% அதிகரித்து, ஜப்பான் நாட்டு மக்கள்தொகையில் அந்நிய நாட்டினரே 3%-ஆக உள்ளனர்.இந்நிலையில், ஜப்பானின் குறைவான மக்கள்தொகையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. ஒரு நபருக்கு 3 வேலைவாய்ப்புகள் கிடைப்பதாகத் தெரிவிக்கின்றனர்.இந்நிலை தொடர்ந்தால் ஜப்பானின் பொருளாதாரம் உலகளவில் பாதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அஞ்சுகிறது.
மேலும், பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துகொண்டே சென்றால், 2070ஆம் ஆண்டில் அதன் மக்கள்தொகை சுமார் 30% குறைந்து 87 மில்லியனாக இருக்கும்; ஒவ்வொரு 10 நபர்களில் 4 பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் இருப்பர் என்று கூறப்படுகிறது.2100ஆம் ஆண்டில் ஜப்பானின் மக்கள்தொகை 63 மில்லியனாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.